பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் நேற்று (25.07.2025) முதல் சுமார் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத்  தொடங்கியிருந்தார்.

முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் அனுமதி இல்லாமல் பாமகவின் கட்சிக் கொடி மற்றும் சின்னங்களை அன்புமணி பயன்படுத்தக் கூடாது எனவும், தமிழக டி.ஜி.பி.யிடம் இந்த பிரச்சார பயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி நேற்று மாலை திருப்போரூரில் அன்புமணி தனது நடைப்பயணத்தைத் தொடங்கி இருந்தார்.  இன்று செங்கல்பட்டு பகுதியில் நடைப்பயணம் தொடர்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதே சமயம்  இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அன்புமணி நடைப்பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்துக்குத் தடையில்லை என பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். அன்புமணி ராமதாஸின் தமிழக உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்புமணி நடைப்பயணத்திற்குத் தடை விதிக்கவில்லை தமிழகக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் ஆணையர், எஸ்.பி.க்கள் மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்து நடைப்பயணத்திற்கு அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனரின் அனுமதி இல்லாமல் நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது என ராமதாஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளதால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.