நாகை வெளிப்பாளையம் வீரி குளத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். நகை செய்யும் தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 11 வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகனும் இருந்தனர். ஜெகதீஸ்வரன் நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

Advertisment

செந்தில்குமார் நேற்று வேலைக்கு வராததால், அவரது வீட்டிற்கு அவர் வேலை செய்யும் நகை கடை உரிமையாளர் ஒரு பையனை செந்தில்குமார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். வீட்டிற்கு வந்த பையன் 3 பேரும் வீட்டில் வி‌ஷமருந்தி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தான்.

Advertisment

nagai

இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. பள்ளி திறந்து 10 நாட்களை கடந்தும் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளிக் கட்டணம் கட்டவில்லை. பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கூறியுள்ளது. நகைத்தொழிலாளியான செந்தில்குமார் போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால் கடன் தர யாரும் முன்வரவில்லை.

Advertisment

தனது மகன் படித்து போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்கிறான், அவனுக்கு பள்ளியில் படிக்கும்போதே கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று அக்கம் பக்கத்தில் அவர் புலம்பியுள்ளார். இந்த வேதனையில்தான் அவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இருந்த தனது மகனுக்கு கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையே என்ற வேதனையில் இருந்த செந்தில்குமார் - லட்சுமி இருவரும் வி‌ஷம் சாப்பிடுவதற்கு முன்பாக தங்களது ஒரே மகனுக்கு போலீஸ் உடையை அணிவித்து ரசித்துள்ளனர். பின்னர் வி‌ஷத்தையும் ஊட்டி உள்ளனர். போலீஸ் உடையுடன் பள்ளிச்சிறுவன் தனது பெற்றோர்கள் மடியில் இறந்து கிடந்தது கண்டு அக்கம் பக்கம் கதறி அழுதனர்.