Advertisment

பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்த காவல்துறையினர்...

Police destroy thousands of liters of liquor

கல்வராயன் மலையில் ஜூன் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்ய ஆரம்பித்து சில நேரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஆங்காங்கே அருவியாகக் கொட்டும். இதைப் பார்ப்பதற்கும் அங்கே குளிப்பதற்கும் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சிக்கு, மேகம் நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம். மலையில் உள்ள கரியாலூர், வெள்ளிமலை, கருமந்துறை, சேராப்பட்டு என பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலாவாகச் சென்று அப்பகுதியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்து மகிழுந்து திரும்பிச் செல்வார்கள். ஆண்டுதோறும் இங்குள்ள சின்னதிருப்பதி என்ற பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் ஏகப்பட்ட பக்தர்கள் சென்று வழிபடுவார்கள்.

Advertisment

இப்படி சுற்றுலா வரும் மக்களைக் கவர்ந்த கல்வராயன் மலையில் சமீபகாலமாகக் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடி அருவியாகக் கொட்ட ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கல்வராயன் மலைப் பகுதி முழுவதும் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர். அப்போது ஈச்சங்காடு ஓடையில் தனிப்பிரிவு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா ரவிக்குமார் உள்ளிட்டோர் அங்கு போடப்பட்டிருந்த 2000 லிட்டர் சாராய ஊறலை அழித்துள்ளனர். டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற குழுவினர் நத்தம் பள்ளி கிராமப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஆயிரம் லிட்டர் ஊறலை அழித்தனர்.

Advertisment

காய்ச்சி, கடத்துவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர். இதையடுத்து அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர். அங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி அதற்காக 825 கிலோ வெல்லம் வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி ரவிச்சந்திரன் கூறுகையில், “கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. சாராயத்தை அழிக்க காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி மலையில் வாழும் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். அப்படி அளிக்கும் தகவலின் அடிப்படையில் கல்வராயன் மலைக் கிராமங்களிலும் மலையடிவார கிராமங்களில் ரெய்டு நடத்தி கள்ளச்சாராயத்தை முற்றிலும் அழித்து வருகிறோம்.

அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்தும் வருகிறோம். மேலும் போலீஸார் அப்பகுதி கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர். ஆகையால் கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் 10581 என்ற எண்ணை தொடர்பு கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம். அப்படி தகவல் அளித்தவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இதனால் யாரும் பயப்பட வேண்டாம். கள்ளச்சாராயம் உட்பட கல்வராயன் மலையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து காவல்துறைக்கு பயமின்றி தயக்கமின்றி புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்” டி.எஸ்.பி ரவிச்சந்திரன்.

சமீப காலங்களாக கல்வராயன் மலையில் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பு, கள்ளச்சாராய உற்பத்தி அதிகரித்து வருகிறது. காவல்துறையும் அடிக்கடி மலைப்பகுதிக்குச் சென்று குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீதும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீதும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Salem Kalvarayan hills
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe