Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரைதாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத்தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.