Skip to main content

“ஓ.பி.எஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - போலீசில் புகார் 

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Police complaint against O Panneerselvam

 

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் பன்னீர்செல்வம் சார்பில் வருகின்ற திங்கள்கிழமை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில், அதிமுக கொடிகளையும், கட்சி சின்னத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இந்த நிலையில் அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை பன்னீர்செல்வம் தரப்பில் பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இதனை பொருட்படுத்தாமல், பன்னீர்செல்வம் சார்பில் நிகழ்ச்சியில் அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதை கண்டித்தும், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும், அதிமுக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில், திரளான அதிமுகவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

 

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் எம்பி குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், சிவபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

அதிமுக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “அதிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாத இவர்கள் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், பொதுமக்களையும் அதிமுகவினரையும் குழப்பும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும், குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிமுகவிற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 2000 ஆகியவற்றின்படி வழக்குப் பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்