Police Commissioner explains Amstrong's case

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படு கொலை செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

Advertisment

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா தனது கூட்டாளிகளோடு இந்தக் கொலையை செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், காவல் ஆணையர் சந்தீப் ராய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை வழக்கில், குற்றவாளிகளை 3 மணி நேரத்திற்குள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. முக்கிய இடங்களில் தேவையான பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்படி நடவடிக்கை எடுப்போம்.

Advertisment

அரசியல் பழிக்குப்பழியாக கொலை நடைபெறவில்லை. மற்ற பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகுதான் உண்மை காரணம் தெரியவரும். கொலை வழக்கில் கைதானவர்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த வழக்கில் கைதான பலர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட ஆற்காடு பாலா மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளன. பாலா, திருமலை, திருவேங்கடம் உள்ளிட்டோர் உள்ள மற்ற வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தன் மீது இருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் ஆம்ஸ்ட்ராங் விடுவிக்கப்பட்டிருந்தார். போலீசாரிடம் ஒப்படைத்த துப்பாக்கியைத்தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 13ஆம் தேதி அவர் திருப்பி வாங்கிக்கொண்டார். அவரது துப்பாக்கி அவரிடம் தான் இருந்தது. சென்னையில் கடந்த ஆண்டைக்காட்டிலும் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. இந்தியாவிலேயே சென்னை பாதுகாப்பான நகரம் என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்விலேயே தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அச்சுறுத்தல் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை தொடர்பான எந்த அறிக்கையும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் இன்னும் முடிவாகவில்லை” என்று கூறினார்.