ADVERTISEMENT

இளம்பெண் கொலை வழக்கு; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

06:34 PM Feb 29, 2024 | ArunPrakash

சென்னையிலிருந்து ரமேஷ் மற்றும் அவரது காதலி பவித்ராஸ்ரீ இருவரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரி குப்பம் பகுதியில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்ட மர்ம கும்பல் ரமேஷின் காதலி பவித்ராஸ்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

ADVERTISEMENT

இதையடுத்து மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய பவித்ராஸ்ரீ அந்த வழியாக வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஒலக்கூர் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், அந்த மர்ம நபர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் கோழியன் குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திர பெருமாள் என்பவரது மகன் 24 வயது உதய பிரகாஷ், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்தனர். சம்பவம் நடந்த அன்று சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கோனேரி குப்பம் அருகே ரமேஷ் அவரது காதலி பவித்ராஸ்ரீயும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர். ஆனால் பவித்ராஸ்ரீ தனது செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். பின்பு அவரிடம் செல்போனை பறித்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றபோது காரில் அடிப்பட்டு பவித்ராஸ்ரீ உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரிடமும் பறிக்கப்பட்ட செல்போனகள் குறித்து விசாரித்தபோது, விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதனைப் பறிமுதல் செய்வதற்காக இருவரையும் அழைத்துக்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், ஏட்டு தீபன் மற்றும் காவலர்கள் சென்றுள்ளனர். அங்கு செல்போனை எடுத்துக் கொடுத்த உதயபிரகாஷ் செல்போனுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் ஏட்டு தீபன் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி உதவி ஆய்வாளர் ஐயப்பன், உதயபிரகாஷின் வலது காலில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். உடனே சரிந்து விழுந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு தீபன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT