Advertisment

வழிப்பறிக்கு கைத்துப்பாக்கி-தொடர்ந்து திருட்டு வழக்குகளில் சிக்கிய போலீஸ்!

Police caught in a series of theft cases - handgun for robbery!

Advertisment

முதலமைச்சர், நீதிபதிகள், வங்கிகள், விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆயுதப்படை பிரிவு காவலர்களின் முக்கியப் பணியாகும். குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் அழைத்துச் செல்வதும், கொலை கொள்ளை நடந்தால் பாதுகாப்பு மேற்கொள்வதும்கூட, ஆயுதப்படை காவலர் பணிகள்தான். விருதுநகர் மாவட்டத்திலோ, ஆயுதப்படை காவலரான தனுஷ்கோடி தொடர்ந்து திருட்டு வழக்குகளில் சிக்கி, இரண்டு தடவை சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

திருட்டுச் சம்பவம் 1

வத்திராயிருப்பு வட்டம், பெரியகுளம் கண்மாயில் 28-7-2020 அன்று அதிகாலை 1 மணிக்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளிய போது பிடிபட்ட டிராக்டர், கூமாபட்டி காவல்நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேநாள் அதிகாலை 3 மணிக்கு அந்தக் காவல்நிலையத்துக்கு வந்த ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி, டிராக்டரை விடுவிக்கும்படி அப்போது பாரா பணியில் இருந்த முதல்நிலைக் காவலர் வனலிங்கம்மாளிடம் பிரச்சனை பண்ணியதோடு, டிராக்டரை எடுக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று அடம்பிடிக்கவும் செய்தார். அதிகாலை 5 மணியளவில் வனலிங்கம்மாள் ரெஸ்ட்-ரூம் சென்றபோது, மணலுடன் கூடிய டிராக்டரை ஒருவர் அங்கிருந்து கிளப்ப, அதன் பின்னால் ஓடினார் தனுஷ்கோடி. இந்தத் திருட்டு வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் கூமாபட்டி காவல்நிலையத்தில் தனுஷ்கோடி மீது வழக்கு பதிவானது. கிருஷ்ணன்கோவில் ஆயுதப்படை பிரிவு பணியிலிருந்து தனுஷ்கோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

திருட்டுச் சம்பவம் 2

தற்போது விருதுநகர் ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரியும் தனுஷ்கோடி விடுமுறையில் இருந்தபோது, கடந்த 9-2-2025அன்று விருதுநகர் வட்டம் – வச்சக்காரப்பட்டியில் திருட்டு டூ வீலருடன் (TN 84 F 3675) மாட்டினார். அப்போது அவரிடமிருந்து உரிமம் பெறாத ஒரு கைத்துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்து தப்பிச் சென்ற தனுஷ்கோடியின் கூட்டாளியான பழனியைச் சேர்ந்த சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளான். வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் தனுஷ்கோடி மற்றும் சுரேஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் – நாசரேத் பகுதியில் தனுஷ்கோடியும் சுரேஷும் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் 35 பவுன் திருட்டு நகைகளைக் கைப்பற்றியதாகவும், ஒரு தோட்டா மிஸ்ஸிங் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் எதற்காக அந்தத் தோட்டா பிரயோகிக்கப்பட்டது என விசாரித்ததாகவும், பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், நகைகள் பிடிபட்ட விபரங்கள் எதுவும் வழக்கில் பதிவு செய்யப்படவில்லை. அதனால், ஒரு போலீஸ்காரர் (ஆயுதப்படை) மீது நகைத்திருட்டு வழக்கு பதிவதா என்ற கரிசனமோ, நகைகளைப் பங்கு பிரித்துக்கொண்ட செயலோ, எதுவோ நடந்திருக்கிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

விருதுநகர் காவல்துறை வட்டாரத்திலோ “தனுஷ்கோடியிடமிருந்து நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அப்படி நடந்திருந்தால், மீடியாக்களின் பார்வையிலிருந்து தப்ப முடியுமா? வச்சக்காரப்பட்டியில் ஊர்க்காரர்களிடம்தான் முதலில் சிக்கினார் தனுஷ்கோடி. பிறகுதான், வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதனால்தான், துளியும் உண்மை இல்லாத திருட்டு நகை பேச்செல்லாம் பொதுவெளியில் இருந்து கிளப்பப்படுகிறது.” என்கிறார்கள்.

ஆயுதப்படை காவலர் ஒருவர் மாறி மாறி திருட்டு வழக்குகளில் சிக்குவதும், துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகி சிறை செல்வதும், காவல்துறையின் மாண்பினைக் களங்கப்படுத்துவதாக உள்ளது.

case police Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe