Skip to main content

மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக திருநங்கை மீது போலீஸ் தாக்குதல்! பாலபாரதி போராட்டம்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

 

Police attack transgender in support of sand robbers! Balabharati

 

மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக திருநங்கையின் வீடு புகுந்து, போலீசார் தாக்குதல் நடத்தி பொய்வழக்கு போட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டார்.


திண்டுக்கல் அருகே உள்ள முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை சமந்தா. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிர்புறத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தல்களில் ஈடுபட்டு வருபவர். ஒருநாள், இவர் டிராக்டரில் மணல் கடத்தி வரும்போது சமந்தா வீட்டில் உள்ள நாய்கள் குரைத்து இடையூறு செய்ததையடுத்து சமந்தா வளர்த்த 10க்கும் மேற்பட்ட நாய்களை சீனிவாசன் விஷம் வைத்துக் கொன்றதாக சமந்தா புகார் தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில் சீனிவாசன், அவரது மகன் லட்சுமணன், நிவின் குமார், என்ற அப்புக்குட்டன் ஆகியோருக்கு ஆதரவாக திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் தெய்வம், சமந்தாவின் வீட்டுக்குச் சென்று மிரட்டியதோடு தடியால் அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பிறகு, சமந்தாவின் சாதியைச் சொல்லியும் திட்டியுள்ளார். மேலும், மூன்றாம் பாலினத்தவரை திருநங்கை என்று அழைக்கும் வழக்கத்திற்கு வந்துள்ள நிலையில் சமந்தாவை அவமதிக்கும் வகையில் திட்டியுள்ளார். அதோடு நிற்காமல் சமந்தா வசிக்கும் பகுதியில் சில இளைஞர்களை அனுப்பி  பிற வீடுகளின் கதவுகளைத் தட்டி இது சமந்தா வீடுதானா என்று பாலியல் தொல்லை கொடுக்கச் செய்துள்ளனர். இதன் மூலம் சமந்தா மீது பொய் வழக்குப் பதிந்து சிறையில் அடைப்பதற்காக மணல் கொள்ளையர்களும், திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய ஆய்வாளரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 


இந்தப் பிரச்சனை தொடர்பாக திருநங்கை சமந்தா, கடந்த 6 மாதமாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சமந்தா அணுகினார். சமந்தாவிற்கு நியாயம் கேட்டு திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஜி.ராணி, மாவட்டத் தலைவர் எம்.ஜானகி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, பாதிக்கப்பட்ட திருநங்கை சமந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். பின்னர் கோட்டாட்சியர் உஷாவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாலபாரதி, சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் மூலம் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, “திருநங்கை சமந்தா, திண்டுக்கல் தாலுகா ஆய்வாளர் தெய்வத்தால் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளார். அந்தப் பகுதியில் சமந்தா வளர்த்த 10 நாய்களை மணல் கொள்ளையர்கள் விஷம் வைத்துக் கொன்றுவிட்ட நிலையில் சமந்தா புகார்கொடுத்துள்ளார். எனவே, சமந்தா, மணல் கொள்ளையர்களுக்கு இடையூறாக இருக்கிறார் என்பதற்காக தாக்கப்பட்டிருக்கிறார். மாதர் சங்கம் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. சமந்தா மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். சமந்தா புகார் கொடுத்த மணல் கொள்ளையர்கள் மீது உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 நாய்களை விஷம் வைத்துக் கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 

 

Ad

 

அதற்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். நாய்கள் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும். திருநங்கை சமந்தாவை பொது இடத்தில் கைநீட்டி அடிப்பது, பொய்வழக்கு போடுவது, தரக்குறைவாக அவதூறு பரப்புவது நாகரீகமற்ற செயல். காவல்துறை அதிகாரிகள் இப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது, சமந்தா உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். 


தற்போது, முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளோம். கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு, மக்கள் மத்தியில் பொது விசாரணை நடத்த உள்ளோம். மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், புளுகிராஸ் என அனைத்து அமைப்புகளுக்கும் புகார் அனுப்ப உள்ளோம். எனவே தமிழக அரசும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்