Skip to main content

ராணுவ வீரருக்கு உதவி செய்த காவல்துறை: நெகிழ்ச்சி அடைந்த தாய்!! 

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

The police who assisted the soldier

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பாரதி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பார்த்திபன். இவர் சென்னை பட்டாபிராம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஹவில்தாராக பணி செய்துவருகிறார். இவரின் தாயார் லட்சுமிகாந்தம் வயது 82. இவர் மட்டும் தனியாக விக்கிரவாண்டியில் வசித்துவருகிறார். அவ்வப்போது தாயாருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை சென்னையில் வாங்கும் ராணுவ வீரர் பார்த்திபன், அதைக் கூரியரில் அனுப்பி வைப்பது வழக்கம். 

 

கடந்த சில தினங்களாக கூரியர் சர்வீஸ் சரிவர வாடிக்கையாளர்களிடம் தபால்களை, பார்சல்களைக் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், பார்த்திபன் அனுப்பிய மருந்து பார்சல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கூரியர் அலுவலகத்திற்கு வந்து தங்கிவிட்டது. இதுகுறித்து கூரியர் அலுவலகம் மூலம் விசாரித்து விபரமறிந்த பார்த்திபன் எப்படியும் தனது தாய்க்கு அந்த மருந்து கிடைக்க வேண்டும் என்ற தாய்ப் பாசத்தின் காரணமாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தை தொடர்புகொண்டுள்ளார். அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டர் பரணிநாதன் அவர்களிடம் தனது தாயாருக்கு சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட மருந்து பார்சல் விழுப்புரம் கூரியர் அலுவலகத்தில் தேங்கிக் கிடப்பது குறித்தும், அதை அங்கிருந்து பெற்று தனது தாயாரிடம் சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளார். 

 

சப் - இன்ஸ்பெக்டர் பரணிநாதன் உடனடியாக விழுப்புரத்தில் உள்ள கூரியர் அலுவலகம் சென்று, பார்த்திபன் அனுப்பிய மருந்து பார்சலைப் பெற்றுக்கொண்டார். அதை உடனடியாக விக்கிரவாண்டி சென்று பார்த்திபன் தாயார் லட்சுமிகாந்தம் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த தகவலை ராணுவ வீரர் பார்த்திபனுக்கும் தெரிவித்தார். இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த ராணுவ வீரர் பார்த்திபன், கரோனா  நோய் பரவல் காரணமாக  சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு குறித்து  கடுமையான பணிகளுக்கு இடையேயும் தனது தாயாருக்குச் சேர வேண்டிய மருந்து பார்சலைக் கொண்டு வந்து கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதனின் மனிதாபிமான சேவைக்கு நன்றி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.