ADVERTISEMENT

கர்ப்பிணியை இரும்பு ராடால் தாக்கியவர் கைது!

05:24 PM Apr 15, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமரன். இவர், இவரது மனைவி கவியரசி மற்றும் தங்கள் குழந்தையுடன் கடந்த 8ம் தேதி காலை 11 மணியளவில் தங்கள் ஊரில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தடுப்பூசிக்கான அட்டையை (மருத்துவச் சீட்டு) வீட்டிலே மறந்து வைத்துவிட்டுக் கிளம்பியுள்ளனர்.

அதனால், அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஊருக்குத் தடுப்பூசி அட்டையை எடுக்கச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரது கர்ப்பிணி மனைவியான கவியரசியை டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மருது பாலசிங்கம், பாஸ்கர், பிரகாஷ், சுந்தரராஜன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், கண்ணன், ஏட்டு சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விழுப்புரம் ஏனாதிமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம நபர் பைக்கில் வந்துள்ளார். அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட போலீசார் அவரை அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் 39 வயதான அறிவழகன் என்பது தெரியவந்தது. இவர் தான் கவியரசியை தாக்கிவிட்டு 11 சவரன் நகையைப் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, அறிவழகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் நகையை மீட்டனர். பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் விசாரணை குற்றவாளியாக அடைத்துள்ளனர். குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கடலூர், நெல்லிக்குப்பம், திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே, இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT