
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் ஏராளமான பச்சைக் கிளிகளை அடைத்து வைத்திருப்பதாக அவலூர்பேட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் வீட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் தனித்தனியாக பிரித்து கூண்டில் அடைத்து வைத்து வளர்த்து வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அதோடு அந்தக் கிளிகளையும் பறிமுதல் செய்தனர். இப்படி ஏராளமான கிளிகளை வளர்ப்பதற்கு காரணம், கிளி ஜோசியர்கள் இங்கு வந்து கிளிகளை வாங்கிச் சென்று அதைப் பழக்கி, கிளி ஜோசியம் சொல்வதற்குப் பயன்படுத்தி வந்ததுதான். இதையடுத்து சட்டப்படி பச்சைக் கிளிகளை அடைத்து வைத்து வளர்த்தது குற்றமென்று லட்சுமியை போலீசார் கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட லட்சுமியையும் பச்சைக்கிளிகளையும் அவலூர்பேட்டை போலீசார் செஞ்சி பகுதி வனத்துறை அதிகாரி வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பச்சைக் கிளிகளைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடப் போவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக பச்சைக் கிளிகளை வளர்த்த குற்றத்திற்காக லட்சுமி மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகளை ஒரே வீட்டில் அடைத்து வைத்து வளர்த்து வந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.