
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி எனப் பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கொட்டாரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 52 வயது லோகிதாஸ் என்பவர் வேட்புமனுக்களை தயார் செய்துகொண்டு நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்வதற்காக வந்துள்ளார்.
தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் முன் டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த லோகிதாஸ் மீது சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர், தலைமறைவான குற்றவாளி லோகிதாஸ்தான் எனக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த பொங்கல் திருவிழாவின்போது கொட்டாரம் கிராமத்தில் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கத்தரிக்கோலால் வயிற்றில் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் லோகிதாஸ் மீது ஆவினங்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு லோகிதாசை கைது செய்வதற்கு போலீஸ் தேடி வந்துள்ளனர். ஆனால், இவர் தலைமறைவாக இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில், இன்று லோகிதாஸ் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்து, கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரை போலீசார் கைதுசெய்த சம்பவம் திட்டக்குடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.