/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2654.jpg)
சேலம், தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைப்பேன் என்று மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, புதன்கிழமை (ஜூன் 22) தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், சென்னையில் ஜூன் 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாம்பரம், சேலம் ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக்கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து, சென்னை காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில், தாம்பரம், சேலம் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். உள்ளூர் காவல்துறையினருடன் ரயில்வே காவல்துறையினரும் சோதனை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சேலம் ரயில்நிலையத்தில் அனைத்து நடைமேடைகள், பார்சல் அலுவலகம், பயணிகள் ஓய்வறைகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்ட பிறகும், வெடிகுண்டு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மர்ம நபர்கள், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதுகுறித்து சேலம், தாம்பரம் ரயில்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம நபர் பேசிய செல்போன் சிக்னல், தாம்பரம் டவர் எல்லையைக் காட்டியது. அப்பகுதியில் தாம்பரம் காவல்துறையினர் தீவிரமாக தேடினர். தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியில் ஓரிடத்தில் பதுங்கியிருந்த குண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, வியாழக்கிழமை (ஜூன் 23) அதிகாலையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய பெயர், வினோத்குமார் (35) என்பதும், சிதம்பரம் அருகே உள்ள உடையூரைச் சேர்ந்தவர், சிதம்பரத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. வினோத்குமார், ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இரண்டு முறை குண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், மனைவியுடன் தகராறு நடந்தால், மது குடித்துவிட்டு, போதையில் இவ்வாறு குண்டு மிரட்டல் விடுப்பதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
விசாரணையின்போது, அந்த வாலிபர் தன்னை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து தாம்பரம் காவல்துறையினர் அவரை, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். சேலம் ரயில்வே காவல்துறையினரும் வினோத்குமாரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)