/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_100.jpg)
கோவை மாவட்டத்தில் செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால், வந்தவர்கள் வழக்கத்துக்கு மாறாக முகபாவனைகள் செய்யவே போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில்.. அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு சஞ்சய், கோவை தீத்திபாளையம் அருள் நகரைச் சேர்ந்த ஜலாலுதீன், கோவை இடையர்பாளையம் பி.என்.டி காலனியைச் சேர்ந்த கிட்டான் என்ற சரவணக்குமார் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மூவரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும்.. இங்கே எதற்கு சுற்றித் திரிகிறீர்கள்.. என்ன விவகாரம் என போலீஸ் கேட்டபோது, அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த கும்பலில் இருந்து சஞ்சய் குமாரை சோதனை செய்தனர். அப்போது ஒரு கை துப்பாக்கி இருந்தது. இதைக் கண்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக அதை அவனிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜு என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அத்துடன்கடந்த ஆண்டு ரவுடி சஞ்சய் ராஜூ, ஆவாரம்பாளையத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில்தொடர்புடையவர்கள் என்பதும் வெளிவந்தது. மேலும், இதில் சம்மந்தப்பட்ட ரவுடி கும்பலின் தலைவன் சஞ்சய் ராஜ், தற்பொழுது கோவை சிறையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தற்பொழுது, இந்த கும்பலுக்கு இடையூறாக பொன் குமார் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச்சென்று கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக, சிக்கியவர்கள் போலீசிடம் தெரிவித்தனர். அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுஸ்சிங் யூனிட்டை சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கோவையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை மிரட்டல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் சஞ்சய் ராஜ், காஜா உசேன் ஆகியோர் மூளையாக செயல்பட்டு கொலை திட்டத்தை அரங்கேற்ற சதி செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கிலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர், கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)