/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_55.jpg)
சேலத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக ஊர்க்காவல் படை வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரோனா ஊரடங்கால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்திக்கொண்ட சட்ட விரோத கும்பல் தோட்டங்களிலும், வீடுகளிலும் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது பரவலாக அதிகரித்துவருகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தலில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறையினர் கைதுசெய்து, சிறையில் அடைத்துவருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தை அடுத்த வலசையூர், தாசநாயக்கன்பட்டி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக வீராணம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ. சின்னசாமி தலைமையில் காவல்துறையினர் தாசநாயக்கன்பட்டி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (36) என்பவர், தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்,50 லிட்டர் சாராய ஊறலைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், சேலம் மாநகர ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றிவருவது தெரியவந்தது.
கைதான விவேகானந்தன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)