Police arrested four and interrogate them in secret ..!

Advertisment

கோவையில் சிறுவன் உட்பட நான்கு பேர் போதை ஊசி செலுத்தும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் நால்வரையும் அடையாளம் கண்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வலி நிவாரணிக்காக பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி அதனுடன் தண்ணீர் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்தி போதை அனுபவித்தது தெரியவந்தது. வலி நிவாரணி மாத்திரைகளைக் கோவையில் ஒரு கும்பல் ரூ. 300 முதல் ரூ. 900 வரை விலை வைத்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்திருக்கின்றனர்.

உக்கடம், குறிச்சி, குனியமுத்தூர், போத்தனூர் ஆகிய பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இரவு நேரத்தில் கூட்டம்கூட்டமாக கூடும் இளைஞர்கள், போதை ஊசி போட்டுக்கொண்டு போதையில் சுற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஏராளமான இளைஞர்கள் ஒன்றுகூடி கூட்டமாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசில் புகாரும் செய்யப்பட்டது. இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவின்பேரில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில்,கோவையில் வைரலான வீடியோவில் 7 இளைஞர்கள் அமர்ந்து போதை ஊசி போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டது தெரியவந்தது.அதில் இதுவரை 4 பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட 4 நபர்கள், குனியமுத்தூர் கோவைப்புதூர் பிரிவைச் சேர்ந்த சாகின் (19), குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் பகுதியைச் சேர்ந்த சாதிக் (21), பிருந்தாவனம் நகரைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (21), மற்றும் 18 வயது சிறுவன் ஒருவன் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisment

ஆனால், அவர்களை போலீசார் கைது செய்யாமல் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். “போதை ஊசி தொடர்பாக சிக்கிய 4 பேரிடம் வலி நிவாரணி மாத்திரை எப்படி கிடைத்து?இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? எப்படி அவர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள் என்பது குறித்து விசாரிக்கிறோம். ஏற்கனவே கோவை மாநகர பகுதியில் போதை ஊசியைப் பயன்படுத்திய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் செயலில் ஈடுபடும் கும்பலை முற்றிலும் கைது செய்தால்தான் போதை மருந்து கலாச்சாரத்தை ஒழிக்க முடியும்”என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.