Police arrested fake doctors kallakurichi district

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கூவாகம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், தமிழ்ச்செல்வி மூன்றாவது முறையாக கருத்தரித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று கருதி திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள மருத்துவர்கள் ஸ்டீபன் அவரது மனைவி சத்திய ராணி ஆகியோரிடம் சென்று தமிழ்ச்செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

Advertisment

ஆனால் மேற்படி இருவரும், முறையாக மருத்துவம் படிக்காமல், போதிய பயிற்சி இல்லாமல் தவறாக மருத்துவம் செய்துள்ளனர். இதனால் தமிழ்ச்செல்விக்கு கருக்கலைப்பு செய்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கர்ப்பப்பையை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டீபன், சத்திய ராணி ஆகியோரை குமரேசன் சந்தித்து தவறான சிகிச்சை அளித்தது குறித்து விசாரணை செய்துள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் குமரேசனை மிரட்டியுள்ளனர். அப்போதுதான், அவர்கள் போலி மருத்துவர்கள் என்பது தெரியவந்தள்ளது.

Advertisment

இதை தொடர்ந்து குமரேசன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் போலி மருத்துவர்களான கணவன் மனைவி இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த போலி மருத்துவர்களான கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்து, ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலையில் உள்ளது லா.கூடலூர். இந்த ஊரில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சென்றிருந்தனர். அப்போது இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த முருகேசன் என்பவரது கூரை வீட்டை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அங்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் ஒரு மூதாட்டிக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

Advertisment

அதைக்கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர். அவர், 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மருந்தகம் வைத்து அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலருக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால் பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து போலி மருத்துவர் இளையராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் வைத்திருந்த மருந்தகத்திற்கும் சீல் வைத்தனர்.