/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4451.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர் தங்களுக்கு சொந்தமான கரும்பு வயலில் உடல் அழுகிய நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் டி.எஸ்.பி. மனோஜ் குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், போலீசார் சிவபாலன், ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(55) என்பவர் தான் இந்தக் கொலைக்கு காரணம் என சந்தேகித்துள்ளனர். அதன்படி அவரை தேடியபோது, ராமமூர்த்தி தன் குடும்பத்துடன் தலைமறைவாகியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை தேடிய போது, அவர் பழங்கூரில் இருந்ததை போலீஸார் கண்டறிந்து அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் ராமமூர்த்தியின் மனைவி மற்றும் மகளையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரனையில், இறந்து போன ராதாகிருஷ்ணன் நிலத்திற்கு பக்கத்தில் ராமமூர்த்தியின் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள விவசாய பயிர்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த ராமமூர்த்தி மின்சார வேலி அமைத்துள்ளார். அந்த மின்சார வேலியில் ராதாகிருஷ்ணன் அவரது மனைவி அன்னபூரணி, மகன் சந்தோஷ்குமார் ஆகிய மூவரும் எதிர்பாராத விதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி, அவரது மனைவி நாவம்மாள், இவர்களின் மகன் தாமரைச் செல்வன் ஆகிய மூவரும் தங்கள் நிலத்திற்கு சென்ற போது ராதாகிருஷ்ணன் உட்பட மூவரை இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே ராமமூர்த்தி குடும்பத்தினர், யாருக்கும் தெரியாமல் தங்கள் நிலத்தை சுற்றி அமைத்திருந்த மின்சார வேலியை அகற்றிவிட்டு, பழங்கூர் எனும் பகுதிக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்து அதில் மூன்று பேர் உயிரிழக்க காரணமாக இருந்த ராமமூர்த்தி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)