
ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் ரூ.25,000 கொள்ளையடித்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில், கடந்த 7ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பணியில் இருந்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் ஆகிய இருவரிடமும் மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டியும், அவர்கள் கையில் கத்தியால் வெட்டியும் அவர்களிடமிருந்த ரூ.25,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கணேசன் மேற்பார்வையில் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், நேற்று (12.02.2021) மதியம் ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் தமிழ் மணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன், போலீசார் ஜெயகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் புதுச்சேரி திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகமாக வந்த டூவீலரை நிறுத்தினர். அப்போது அந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது.
அதில் பயணம் செய்த 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியா என்கிற நவீன் முத்துப்பாண்டியன், கணேசன் மற்றும் சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த 7ஆம் தேதி திண்டிவனம் அருகில் உள்ள மேற்படி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கத்திமுனையில் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், இவர்கள் இதேபோன்று பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தியபோது வண்டியிலிருந்து கீழே சாய்ந்ததில் பாண்டியா என்கிற நவீன் முத்துப்பாண்டியன் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்திய 3 கத்தி, ஒரு இருசக்கர வாகனம், பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்படி மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.