Police arrest woman involved in money laundering

விழுப்புரம் நகரில் உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், விழுப்புரம் அருகே உள்ள ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - கோமதி தம்பதி. இவர்கள் விழுப்புரம் நகரில் உள்ள பிரியதர்ஷனி நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் ஒரு லட்சம் மற்றும் 2 லட்சம் என்று நகரில் உள்ள பலரிடம் பணம் வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்திவந்துள்ளார். சமீப காலங்களாக பணம் கொடுத்தவர்கள் ஏலச்சீட்டு நடத்தும்போது ஏலம் கேட்டுள்ளனர். அப்படி கேட்டவர்களுக்கு அவர் பணம் கொடுக்க வேண்டும்.

Advertisment

ஆனால் அவர்களுக்கான ஏலத்தொகை பணத்தைத் தராமல் அந்தப் பணத்திற்கான வட்டித் தொகையை மட்டும் மாதாமாதம் கொடுத்துவந்துள்ளார். 2019ஆம் ஆண்டு கோமதி லதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த அடிப்படையில் அவசர உதவிக்குப் பணம் தேவை என்று லதாவிடம் 5 லட்சம் பணம் கேட்டுள்ளார். லதாவும் தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து கடன்பெற்று அதை கோமதியிடம் இரண்டு தவணைகளாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை லதா திருப்பிக் கேட்டபோது மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலை ஒன்றைக் கொடுத்துள்ளார் கோமதி. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்த லதா முனைந்தபோது வங்கியில் பணம் இல்லை, அதை வங்கியில் செலுத்த வேண்டாம். தான் நேரடியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவதாக கோமதி கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியவாறு இதுவரை லதாவிடம் பணத்தைத் தராமல் ஏமாற்றிவந்துள்ளார்.

Advertisment

மேலும்கோமதி, விழுப்புரம் நகரில் உள்ள பலரிடம் சீட்டு ஏலம் நடத்துவதற்காக வசூல் செய்தபணம் மட்டுமே சுமார் ஒரு கோடிவரை இருக்கும் என கூறப்படுகிறது.பணத்தைக் கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் கொடுத்த பணம் எனக்குத் திருப்பி கிடைக்க வேண்டும்’ என்று லதா புகாரில் தெரிவித்திருந்தார். இவரது புகார் மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், கோமதி பண மோசடியில் ஈடுபட்டதை உறுதிசெய்தனர். இதையடுத்து, கோமதியை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.