Police arrest two youths for stealing goats

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது கொம்மசமுத்திரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயது செந்தில். இவர் தமது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து அதன் மூலம் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கமாக ஆடுகளை மேய்த்து முடித்து மாலை 6 மணி அளவில் தனது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்.

Advertisment

மறுநாள் அதிகாலை ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த கொட்டகையிலிருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு செந்தில் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவரது ஆட்டை இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது. உடனடியாக ரிஷிவந்தியம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து உதவி ஆய்வாளர் அன்பழகன், அசோக்குமார் மற்றும் போலீசார் இதனை விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் வாரம் தோறும் நடைபெறும் ஆட்டுசந்தைக்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர்.

Advertisment

அப்போது 15 கிலோ எடையுள்ள ஒரு ஆட்டை மிகவும் குறைவான விலைக்கு இரண்டு இளைஞர்கள் விற்பதற்கு முன்வந்தனர். இதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவர்களை தனியே அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் காட்டு செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் 20 வயது தினேஷ் அதே ஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் 22 வயது விக்னேஷ் இவர்கள் இருவரும் ஆடுகள் திருடியது தெரியவந்தது.

இவர்கள் தான் கொம்ம சமுத்திரம் செந்தில் ஆட்டை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆட்டையும் ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இதில் தினேஷ் என்பவர் கல்லூரியில் பிஏ படித்து வரும் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் போலீஸார்.