
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூரில் குடும்பத்தினருடன் சாமி கும்பிட வந்து கடலில் குளித்துவிட்டு கடற்கரையில் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்த ரவுடி முகத்து பாண்டி என்பவரை திடீரென போலீஸ் டீம் ஒன்று சுற்றி வளைத்தது. அப்போது ரவுடி முத்து பாண்டியை விசாரணைக்கு வருமாறு போலீச்சார் அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு வர மறுத்ததால், போலீசார் அவரை அங்கிருந்து குண்டுக்கட்டாக இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அப்போது அவரது குடும்பத்தினர் அவரை விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து, போலீசார் ஒருபுறம் முத்து பாண்டியனை பிடித்து இழுக்க மற்றொரு புறம் முத்து பாண்டியனின் உறவினர்கள் அவரை விடாமல் பிடித்து இழுக்க என கூச்சலும் கூப்பாடும் காரணமாக கடற்கரையே களேபரமானது. அந்த நபர் யார்? எதற்காக போலீஸ் சுற்றி வளைத்து இழுத்துச் செல்கிறது? என தெரியாமல் கடற்கரையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.
இதனிடையே போலீஸாருடன் ரவுடி முத்து பாண்டியின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டட்னர். அப்போது நாங்க தான் எந்த வம்பு தும்புக்கும் போறதில்லன்னு ஒதுங்கிட்டோமே, அப்படி இருந்தும் போலீஸ் ஏன் தொந்தரவு செய்கிறது என ஆவேசத்துடன் அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். இருப்பினும் போலீஸார் அந்த ரவுடியை கடற்கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வந்து கோயில் புறக் காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றனர். அங்கேயும் அவரது குடும்பத்து பெண்கள் போலீஸாருடன் ஆவேசமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில்... தாங்கள் அழைத்துச் சென்ற நபர் தூத்துக்குடி மாவட்டம் கீழ கூட்டுடன் காடு கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி முத்து பாண்டி. இவர் மீது தூத்துக்குடி சிப்காட், முறப்ப நாடு, முத்தையாபுரம், சென்னை செங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தனர். தென் மாவட்டத்தில் டாப் டென் கூலிப்படை டீமில் முக்கிய புள்ளியாக இயங்கி வந்த முத்து பாண்டியை கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்ததாகவும், தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு அடையாளங்களை மாற்றித் தலைமறைவாக இருந்ததால் அவரை தீவிரமாக தேடி வந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் ரவுடி முத்து பாண்டி திருச்செந்தூரில் கடலில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருக்கும் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவரை நோட்டமிட்டு கடற்கரையில் வைத்து கைது செய்ததாக தெரிவித்தனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி