
திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையிலான குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கரூர் மாவட்டத்தில் கலப்பட டீசல் பயன்படுத்துதல் போன்ற குற்றங்கள் தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரவக்குறிச்சி அருகே கணவாய் என்ற கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கி வைக்கப்பட்டு குவாரியில் லோடு ஏற்றி வரும் கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கல் குவாரியில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கலப்பட டீசல் 5000லி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கல்குவாரிகள் மேலாளர் மாரிமுத்துவை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.