Police arrest people for smuggling liquor on a bike

திண்டிவனம் அருகே பைக்கில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 792 போலி மது பாட்டில்கள், பைக், விஷ சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வெள்ளிமேடுபேட்டையை அடுத்த கொடிய கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது திண்டிவனத்தில் இருந்து வெள்ளிமேட்டுப்பேட்டை நோக்கி வேகமாகச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, போலீசாரைப் பார்த்தவுடன் தப்பிச் செல்ல முற்பட்டனர்.இருவரையும் துரத்திப் பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டிவனத்தை அடுத்த எறையானூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றவர் புதுச்சேரி மாநிலம், கிழக்கு சாரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வாகனத்தின் முன்புறம் வெள்ளைநிற சாக்கு மூட்டையில் 20 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். மேலும், அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அதில் புதுச்சேரியில் ஒரு நபரிடமிருந்து தமிழகத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய MC DOWELLS (for sale Tamilnadu only) மது என்ற லேபிள்கள் ஒட்டிய பிராந்தி பாட்டில்களை வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும், வெள்ளிமேடுபேட்டையை அடுத்த கீழ்மாவிலங்கை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அன்பழகன் என்பவருடன் சேர்ந்து, அவர் குத்தகைக்கு பயிர் செய்யும் மணிமாறன் நிலத்தில் உள்ள புதர்களில் மறைத்து வைத்துள்ளார். பெலாகுப்பம் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருடன் சேர்ந்து விற்பனை செய்ததாகவும், தற்போது ஊரடங்கு காரணமாக அரசு மதுபானக் கடைகள் மூடியிருப்பதால், இந்தப் போலி மது விற்பனையால் தங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நான்கு பேரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து 792 பிராந்தி பாட்டில்கள், இருசக்கர வாகனம், விஷநெடி சாராயம் ஆகிவற்றைப் பறிமுதல் செய்தனர். சமீபகாலமாக விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, போலி மதுபானங்கள் ஆகியவை அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தனிப்படை அமைத்து கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்தாலும், உள்ளூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசாரின் துணையுடன் இது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisment

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 15,000 லிட்டர் எரிசாராயம் செஞ்சியில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. காலியான மது பாட்டில்களை விலைக்கு வாங்கி, அதில் விஷ சாராயத்தை கலர் சாயம் கலந்து நிரப்பி போலி லேபிள்களை ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளிமேடு பேட்டை பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை உள்ளதா என போலீசார் சோதனை செய்துவருகின்றனர்.