
மயிலாடுதுறையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்காக திருவெறும்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில நாட்கள் முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் அந்த நபர் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரது எண்ணை ப்ளாக் செய்துள்ளார்.
இதையடுத்து வாட்ச் ஆப் மூலம் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர் ஆபாசமாக பேசியதுடன், ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். இப்படித் தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அந்த நபரை தேடிவந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த அடையாளம் தெரியாத நபர் இளம்பெண்ணை தேடி அவர் வசிக்கும் பகுதிக்கே வந்துள்ளார். அப்போது அந்த நபரை அடையாளம் கண்டு சுற்றி வளைத்த போலீசாரிடம் இருந்து அவர் தப்பிக்க அருகே இருந்த உய்யக்கொண்டான் வாய்க்காலில் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். அதில் அவரது இடது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் நாமக்கல் மாவட்டம் தாழையூர் மாங்குடி பட்டியை சேர்ந்த சித்தன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், தினமும் தனக்கு தோன்றிய செல்போன் எண்ணிற்கு போன் செய்ததாகவும், அப்படி பேசும் போது எதிர்முனையில் பெண் பேசினால், அவரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் உறவுக்கு அழைப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த பெண்களுக்கு விருப்பம் இல்லையென்றாலும் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி மற்றும் படங்களை அனுப்புவதை சித்தன் வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்த வகையில், பயிற்சி மையத்தில் படித்து வந்த இந்த பெண்ணிற்கு ஆபாசமாக போன் செய்து பேசியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சித்தன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார் கால் முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.