திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது  ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகி இருக்கிறது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் முதற்கட்டமாக 2  தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 3  தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டது.

அதே சமயம் சிகிச்சையில் உள்ள சிறுமி நலமாக உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் கடந்த 10 நாட்களாக ஆந்திராவின் தடா, சூலூர்பேட்டை, பூடி, காரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் தினறி வருகின்றனர். 

இந்நிலையில் குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புகைப்படங்கள் மற்றும் விடியோ உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள சந்தேகர் ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர் ஆவார். இவரை பற்றி தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற அலைபேசி எண்ணித்த தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.