/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-arrest-logo-file_3.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய உளுந்தூர்பேட்டை, அருகே தேசிய நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் பறந்து விரிந்து நீண்டு கிடக்கின்றன. எடைக்கல் கிராமப் பகுதியில் இருந்து புல்லூர்சாலை வழியாக எலவாசனூர் கோட்டை வரை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு வனக்காடுகள் உள்ளன. இந்த காட்டுப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து பேசிவிட்டு கிளம்பி செல்வார்கள்.
இந்தக் காட்டுப் பகுதிக்கு காதலர்கள் வருவதை, கண்டுப்பிடித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை துரத்தி மிரட்சி பணம் பறித்தது தற்போதுவெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு காதல் ஜோடி அந்தக் காட்டுப் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு காட்டு வழியே எலவசனூர் கோட்டை நோக்கி தங்கள் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அதிவேகமாகச் சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் அந்த கும்பல் நாங்கள் வனத்துறையை சேர்ந்தவர்கள் எங்கள் காட்டுப் பகுதியில் நீங்கள் அத்துமீறி உள்ளே வந்தது தவறு. உங்களை கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் காதலர்கள் இருவரும் பயந்து போய் திகைத்தனர். அவர்களிடம் மர்ம கும்பல் உங்கள் மீது வழக்கு போடுவோம் நாங்கள் வனத்துறையை சேர்ந்தவர்கள் எங்கள் காட்டுப்பகுதியில் நீங்கள் எப்படி வரலாம் என்று மிரட்டியதோடு உங்கள் மீது வழக்கு போடாமல் இருக்க வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் பணம், நகை, செல்போன்களை, தர வேண்டும் என்று மிரட்டி, அந்த காதலர்கள் தாங்கள் அணிந்திருந்த மோதிரம், செயின், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டனர். இளம்பெண் அணிந்திருந்த கால் கொலுசுகளை கழற்றி கொடுத்துள்ளார்.
இவற்றை வாங்கிக் கொண்ட மர்ம கும்பல் இவர்களை மிரட்டி அனுப்பிவிட்டு காட்டு வழியே பறந்து சென்றது. காட்டை விட்டு வெளியே வந்த காதலன் தன் காதலியை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு விரைந்து சென்று உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர்கள், சேட்டு, சுகன்யா மற்றும் போலீசார்எடைக்கல் காட்டுப் பகுதியில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள புதர் பகுதியில் அமர்ந்திருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐண்டு பேரும் விருத்தாசலம் நாச்சியார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், பழமலைநாதர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்த தீபக், காட்டுப்பரூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், அவரது தம்பி மகேஷ் என்கிற மகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. இவர்கள் ஐந்து பேரும் காதல் ஜோடியிடம் நகை செல்போன், கொலுசு ஆகியவற்றை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதே போன்று இந்த காட்டுப் பகுதிக்கு வந்த 20க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளிடம் பணம் நகை செல்போன் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளனர் என்பதை வாக்குமூலமாக அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், செல்போன்கள், இரண்டு கால் கொலுசுகள் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)