Police action on SdPI party opposition for Amaran movie

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தைப் பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.

Advertisment

அதே சமயம் காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமரன் படத்தில் காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமரன் திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கம் முன்பாக 50க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அமரன் திரைப்படத்தைத் தடை செய்ய வலியுறுத்தி திரையரங்கை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மேலும், ‘இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து மத நம்பிக்கையைக் கெடுக்கும் அமரன் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்’ என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக திரையரங்கம் முன்பு போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அதனை மீறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உள்ளே செல்ல முயன்றதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Advertisment