
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60) என்ற மூதாட்டி. இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். ஏற்கனவே இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவரது பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர் ஆடு, மாடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். அந்த வகையில் கடந்த 20ஆம் தேதி (20.05.2025) மாலை, ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்ற சரஸ்வதி வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் வனப்பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்குச் சரஸ்வதி அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும் அவரது காது, மூக்கில் அணிந்திருந்த நகைகள் அறுக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலையைச் செய்தவர்கள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளைக் கொண்டு, அவ்வழியாகச் சென்ற இருவர் குறித்து சேலம் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தியிருந்தனர்.
ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி நகைக்காக அடித்தும், காது, மூக்கு ஆகியவற்றை அறுத்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்த கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமானவர் கட்டிகாரனூரைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பது தெரியவந்தது.

இவர் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்வதற்காக சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவரை பிடிக்க முற்பட்டபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சித்தார். இதனால் போலீசார் நரேஷ்குமாரின் காலில் சுட்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு சங்ககிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த குற்றசம்பவத்தில் யார் யார்? யார்? ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிச் சென்றவரை சுட்டு பிடித்த சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.