பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் சம்பவம்; போலீசார் அதிரடி நடவடிக்கை!

Police action for Aruppukottai woman dsp gayathri incident

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிக்குமார். இவர் நேற்று (02.09.2024), சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், கேசவநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த காளிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சுழி போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காளிக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து காளிக்குமாரின் உடல் இன்று (03.09.2024) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடலை வாங்க மறுத்து, குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவர்கள், அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இதனை ஏற்காத காளிக்குமாரின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Police action for Aruppukottai woman dsp gayathri incident

அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை டி.எஸ்.பி. காயத்ரி தடுக்க முயன்ற போது, அங்கிருந்த போராட்டக்காரர்கள், அவரின் தலை முடியை இழுத்துப் பிடித்து கீழே சாய்க்க முற்பட்டனர். உடனடியாக மற்ற போலீசார், அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின்னர், டி.எஸ்.பி. காயத்ரி இந்த வழக்கு தொடர்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகக் கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெண் டி.எஸ்.பி.யை தாக்கியது தொடர்பாக 7 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொன்குமார், சஞ்சய்குமார், காளிமுத்து, பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் ஜெயசூர்யா என 6 கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Aruppukkottai DSP police
இதையும் படியுங்கள்
Subscribe