/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_226.jpg)
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது துக்கத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “ஒரு சீர்திருத்தக் கலைஞன் மறைந்துவிட்டான் என்று சொல்வதா? என்னைப் பொறுத்தவரையில், ஒரு நல்ல சகோதரனை இழந்துவிட்டேன். என் கவிதைகளின் கொள்கைப் பரப்புச் செயலாளரை நான் இழந்துவிட்டேன். தமிழ்த் திரை உலகம் நீண்ட காலமாக சேமித்துவைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள்.அவர்களில்,விவேக் தனித் தடம் பதித்தவர். கொள்கை, சீர்திருத்தம், பகுத்தறிவு ஆகியவை இருக்க வேண்டும் என்று கலையில் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்.
இன்றைக்கு சாவின் விழியில் அவரது மரணம் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவரது கலைச் சேவை மட்டுமல்ல; அதைத் தாண்டி, அவரது சமூக அக்கறை.ஒரு கலைஞனுக்குத் தேவையான சமூக அக்கறையைத் தன் கலை வழியிலும், கலைக்கு வெளியிலும் அவர் பின்பற்றினார் என்பதுதான் விவேக்கின் தனிச்சிறப்பு. ரசிகர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள்.கலை உலகம் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறது.மனிதர்கள் மட்டுமா இன்று துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்? இல்லை.விவேக் நட்ட மரங்களும், செடிகளும், கன்றுகளும் விவேக்கிற்காக கண்ணீர் சிந்துகின்றன எனச் சொல்ல வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_986.jpg)
எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. என் கவிதைகளை எழுத்துகளை, என்னை, திரையில், திரைக்கு வெளியில் கொண்டாடியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவரும் நானும் ஒரே வகுப்பில் யோகா பழகிக்கொண்டோம். ஓராண்டாக எனக்குப் பக்கத்தில் இருந்து அவர் யோகா கற்றுக்கொண்டார். இப்போது நான் தனியாக யோகா செய்கிறேன். என் பக்கத்து இடம் காலியாகிவிட்டது. நண்பர் விவேக் இவ்வளவு விரைவில், நம்மைவிட்டு போவார் என நான் கருதவில்லை.
59 வயது என்பது இளமை கனிந்த வயது. இனிமேல்தான் ஒருவன் சேவை செய்ய வேண்டிய வயது. பக்குவப்பட்ட வயது. கலை புரிகிற வயது. சமூகத்தை அறிகிற வயது. இந்த வயதில், மரணம் அவரைப் பிரித்துக் கொண்டதில், எங்களுக்குச் சம்மதம் இல்லை. மரணமே உனக்குச் சிரிக்கத் தெரியாது.அதனால்தான், சிரிப்பைத் திருடிவிட்டாய்.விவேக்கை கலைச் சரித்திரம் எப்படி எழுதும்என்று நான் நனைக்கிறேன், ‘விவேக்’ என்றுபெயரைப் போட்டு, எதிர்கால கலைச் சரித்திரம், ‘காமெடி கதாநாயகன்’ எனக் கொண்டாடும். நீண்ட காலம் நினைக்கப்படுவார் என் அன்பு சகோதரர் விவேக்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)