
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் விஜயகாந்த் மறைவுக்கு இறங்கல் தெரிவித்த கவிஞர் பா. விஜய், நம்மிடம் பேசும்போது, “நான் 95 களில் சினிமாவிற்கு புதுசாக வருகிறேன்; அப்போது வாய்ப்புக்காக ஆர்.பி.சௌத்ரி சாரோட அலுவலகம்னு எல்லா அலுவலகங்களுக்கும் தேடி போவேன். அப்போ என்னைப் போன்று நிறைய பேர் சினிமாவில் பாட்டெழுத, நடிக்க, இயக்கம் என வாய்ப்புக்காக தேடி அலஞ்சுட்டு இருப்பாங்க. அப்படி எல்லாரும் அலஞ்சு திருஞ்சு சரியாக மதியம் 1 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த சார் அலுவலகத்தில் சந்திப்போம்; ஏனென்றால், அப்போது யாருக்கும் காலை சாப்பிடும் அளவுக்கு வருமானம் இருக்காது. டீயும் வடையும் தான் அப்போதெல்லாம் காலை சாப்பாடு; ஆனால், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் சார் அலுவலகத்திற்கு சென்றால் உணவும் கிடைக்கும், வாய்ப்பும் கிடைக்கும். அங்க யாரு வாய்ப்பு கேட்டு வந்தாலும், முதலில் சாப்பாடு போட்டு சாப்ட வைத்துதான் பிறகு விஜயகாந்த் பேசவே ஆரம்பிப்பார். இப்படியான ஒரு நடைமுறையை எங்கும் பார்த்திருக்க முடியாது. அதனால் காலையில் எங்கு போனாலும் மதியம் விஜயகாந்த் சார் ஆலுவலகத்திற்கு சென்றிருவோம். சம்பாத்தியம் இல்லாமல் வாய்ப்பு தேடிய கலைஞர்களுக்கு மதியான நேரத்தில் ஒரு வேடந்தாங்கலாக இருந்த இடம்தான் அவரது அலுவலகம். ஏற்கனவே நிறைய பேர் அவரோட விருந்தோம்பலை பற்றி கூறியிருப்பார்கள். அதேபோன்று இது என்னுடைய அனுபவம்.
எனக்கு அவரது நரசிம்மா படத்தில் தான் முதல் வாய்ப்பு கிடைக்கிறது. அதிலிருந்துதான் அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு தவசி, சொக்கத்தங்கம், வானத்தைபோல உள்ளிட்ட படங்களில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக வானத்தைப்போல படத்தின் மூலம் தான் நான் பிரமலமடைந்தேன்; அதற்கு கேப்டன் விஜயகாந்த் தான் காரணம்.
என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் இயக்கத்தில் சொக்கத்தங்கம் படப்பிடிப்பு பொள்ளாட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது நான் அங்கே சென்று பாட்டு எழுதுகிறேன்; அதற்கான விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது, விஜயகாந்த் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நான் ஒரு சாதாரண கலைஞன். ஆனால் அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ‘எப்பா கவிஞர் வந்திருக்கிறார் சாப்பாடு குடுங்கப்பா..’ என்று கூறி அருகில் உட்கார வைத்து சாப்பிட வைத்தார். பெரியா ஆளோ சின்ன ஆளோ எதையும் பார்க்காமல், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து சாப்பிட வைத்து நீண்ட நேரம் பேசி அனுப்பி வைத்தார். நான் என்னுடைய திருமனத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, நான் திருமணத்திற்கு வருவதில் பிரச்சனையில்லப்பா... நான் வந்தன்னா ஒரே கூட்டமா கூடிருவாங்க, மணமக்களே நிக்க முடியாத அளவுக்கு கூட்டம் கூடிரும். அதனால் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வாங்க நாம பேசலாம் என்றார். நானும், திருமணம் முடிந்து மனைவியோடு அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றேன்.
ஒரு 10 ஆண்டிற்கு முன்பு கட்சி ஆரம்பித்து பரபரப்பாக இருந்த நேரத்தில் எனக்கு விஜயகாந்த் சார் போன் செய்து, ‘எப்பா.. நீ படத்துக்கு மட்டும்தான் பாட்டெழுதிவியா..ன்னு உரிமையோட கேட்டார். இல்லன்ன சொல்லுங்கன்னு கேட்டேன், ‘இல்லப்பா என் கட்சிக்கு ஒரு பாட்டெழுதனும் நீ எழுதுரியா..’ன்னு கேட்டார். நான் கண்டிப்பா எழுதுறேன் என்றேன். ஆனால் அந்த பாட்டு கடைசி வரைக்கும் எழுத முடியவில்லை; அதன்பிறகு வேறு யாரும் அந்த பாட்டிற்காக என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்று வருத்தமுடன் பகிர்ந்துகொண்டார்.
மேலும், தவசி படத்தில் நான் எழுதிய, ‘ஏலா இமயமல, எங்க ஊரு சாமி மலன்னு பாட்டை பார்த்து என்னை விஜயகாந்த் பாராட்டினர். எப்படிப்பா இப்படி எழுதுன என்று கேட்டார்.. ‘அண்ணா நா ஒரு ஹீரோவுக்கு எழுதுற மாதிரி பாட்டெழுதல, உங்க கூட இருந்து உங்கள கவனிச்சு தத்ரூபமாக உங்களுக்கு மட்டுமே எழுதுனே. படத்தில் இருக்க காதாப்பாத்திரத்திற்கோ, ஒரு ஹீரோவுக்கோ நான் எழுதல’ன்னு சொன்னே. அப்படியான்னு கேட்டு பாராட்டினாரு. அதுமட்டுமில்லாமல் நமக்கு முன்னாடி வாய்ப்பு கேட்டுட்டு இருந்த பையன் இப்போ இவ்வளவு பெரியா ஆள் ஆய்ட்டான்னு பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஏலே இமயமல பாட்டைத்தான் தற்போது என் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் வைத்துள்ளேன் என வருத்தமாக கூறினார்.