“பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்... புன்னகை என்றும் தங்கட்டும்” - கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன்

Poet Mamani Aroor Tamil Nadan Expressed his congratulations for pongal

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இனிய உதயம் பத்திரிகை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் பொங்கல்வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கவிதையில்.,

பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்!

புன்னகை என்றும் தங்கட்டும்!

எங்கள் தமிழர் வாழ்கவென

இதயம் உரக்கச் சொல்லட்டும்!

கரும்பாய் நெஞ்சம் இனிக்கட்டும்!

கனவுகள் கண்முன் மலரட்டும்

அரும்பாய் இன்றி பேரன்பும்

அழகாய் பெரிதாய் மலரட்டும்!

மஞ்சள் இஞ்சி மணக்கட்டும்!

மகிழ்வே எங்கும் பெருகட்டும்!

வஞ்சம் சேரா வாழ்வினிலே

வளங்கள் எல்லாம் சேரட்டும்!

கழனிகள் எல்லாம் செழிக்கட்டும்!

கண்ணீர் நதிகள் மறையட்டும்!

உழவைச் சுமந்த முதுகெல்லாம்

உடனாய் மகிழ்வைச் சுமக்கட்டும்!

உள்ளம் என்னும் திடலினிலே

உணர்வுப் புழுதியும் பறக்கட்டும்!

ஜல்லிக் கட்டுக் கண்களிடம்

தக்கவர் எல்லாம் வீழட்டும்!

காற்றும் கவிதை பேசட்டும்!

காதலின் ஆழம் கூடட்டும்!

ஊற்றாய் பொங்கும் பேரன்பில்

உயிர்கள்சுகமாய் நனையட்டும்!

மனிதம் ஒன்றே நம்கொள்கை!

மகிழ்ச்சி ஒன்றே நம்பாதை!

புனிதம் என்றால் ஈகைதான்!

புன்னகை வீதியில் நம் பயணம்!

சங்கம் கண்ட தமிழன்னை

சரிதம் தொடர்ந்து எழுதட்டும்!

பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலிது

பூவாய் வாழ்த்தை இறைக்கின்றேன்.!

pongal
இதையும் படியுங்கள்
Subscribe