Skip to main content

போக்ஸோ டு குண்டாஸ்: தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மனைவி நீதிமன்றத்தில் மனு.. காவல் ஆணையர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Pocso to Goondas; Athlete coach Nagarajan's wife files petition in court

 

தடகள வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பயிற்சியாளர் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை நந்தனத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்ற தடகளப் பயிற்சி அகாடமியைப் பிராட்வே பகுதியில் நடத்திவருகிறார். ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நாகராஜன், பயிற்சிக்கு வந்த தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன்படி, நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் மே 28ஆம் தேதி கைதான நாகராஜன், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர், கடந்த ஜூன் 26ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்த உத்தரவை ரத்து செய்து அவரை விடுதலை செய்யக் கோரி, அவரது மனைவி கிரேஸ் ஹெலினா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், எந்தக் காரணங்களும் இல்லாமல் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை எனவும், மொழிபெயர்க்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட நாகராஜனை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும், வழக்கு தொடர்பான சம்பவம் 2013 முதல் 2020 வரை நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்க எந்த அவசியமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்