POCSO case Students gather in support of teacher

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியராகப் பெருமாள் (வயது 58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அதே பள்ளியில் பயின்று வந்த 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் உதவி மைய எண் (child helpline number 1098) மூலம் மாவட்ட குழந்தை நல அமைப்பினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாள் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு பெருமாளை போலீசார் நேற்று முன்தினம் (18.02.2025) கைது செய்தனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அப்போது அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (20.02.2025) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “ஆசிரியர் பெருமாள் நல்லவர். அவர் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பாக முறையான விசாரணை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.