pocso

Advertisment

சேலம் அருகே, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் படையாச்சியூரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 16 வயது சிறுமி ஒருவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பதினெட்டு வயது கூட ஆகாத சிறுமி ஒருவர் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டதை அறிந்த மருத்துவர்கள், குழந்தைத் திருமணம் செய்வது குற்றம் என சிறுமியின் பெற்றோரிடம் கூறினர். மேலும், இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

Advertisment

அதன்பேரில் காவல்துறையினர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டுசிறுமியும், அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் என்பவரும் காதலித்துள்ளனர். காதல் விவகாரம் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் சுதாகர், அவரை வீட்டைவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு கூறியதன் பேரில், இருவரும் தங்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அதன்பிறகு இருவரும் இல்லற வாழ்வைத் தொடர்ந்துள்ளனர். இதில் சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். மகள் கர்ப்பிணி ஆனதை அறிந்ததால், பெற்றோரும் அவருடனான கருத்து வேறுபாட்டை மறந்து சமரசமாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து,சிறுமியை அதாவது 18 வயது பூர்த்தி அடையாத குழந்தையைத் திருமணம் செய்ததாக சுதாகர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.