Pochampally temple festival

Advertisment

போச்சம்பள்ளி அருகே, ஆடிகிருத்திகை பண்டிகையையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் மாங்கனி மலை மீது முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி கிருத்திகை பெருவிழா, சனிக்கிழமை (ஜூலை 23) நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவை ஆட்டம் நடந்தது.

சேவையாட்டத்தின் முக்கிய அம்சமாக பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் ஆர்வத்துடன் வரிசையாக தரையில் அமர்ந்து கொள்ள, பூசாரி அவர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். நூறுக்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Advertisment

இதையடுத்து, ஈட்டி, சாட்டைகளை வைத்து பூஜை செய்து சக்தி அழைத்தல் எனும் சேவையாட்டமும் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, சிலம்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.