Skip to main content

பள்ளிகளில் புழங்கும் போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு  அடிமையாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என்று பலமுறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

 

pmk - ramadoss



கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் வடிகட்டியுடன் கூடிய போதைப் புகையிலை தான் மாணவர்களை சீரழிக்கும் தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறது. கூல் லிப் புகையிலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும்  கூல் லிப் புகையிலை கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த போதைப்  புகையிலைப் பொருள், இப்போது பள்ளிகளை முக்கிய சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் மாணவர்களையே விற்பனை முகவர்களாக மாற்றியிருக்கின்றனர் இப்பொருளை புழக்கத்தில் விட்டவர்கள்.
 

வழக்கமான போதைப் பொருட்களுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வாறு அடிமையாக்கப்படுவார்களோ, அதேபோல் தான் பள்ளி மாணவர்களும் கூல் லிப் போதைப் புகையிலைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முதலில் சில நாட்களுக்கு கூல் லிப் போதைப் புகையிலை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் போதைப் புகையிலைக்கு அடிமையான பின்னர் அவர்கள் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பிடித்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பணத்தைக் கொடுத்து கூல் லிப் போதைப் புகையிலையை வாங்கி பயன்படுத்தும் நிலையில், பணம் கிடைக்காத மாணவர்கள் தங்களின் நண்பர்களை மூளைச்சலவை செய்து இந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி, அதற்கு ஈடாக தங்கள் பயன்பாட்டுக்கு கூல் லிப் புகையிலையை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாக இந்த போதைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அடிமையாகின்றனர்.


 

கூல் லிப் என்பது சற்று மாறுபட்ட வடிவத்தில் கிடைக்கும் மெல்லும் புகையிலை ஆகும். வடிகட்டி பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூல் லிப் புகையிலையை வாயில் போட்டு, ஒரு ஓரத்தில் அடக்கி வைத்துக் கொண்டால், அப்புகையிலை பட்டதும் சுரக்கும் உமிழ்நீர் ஒருவகையான போதையை ஏற்படுத்துகிறது. அதற்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். சென்னையில் பல பள்ளிகளில் பாடவேளைகளிலேயே மாணவர்கள் இந்த புகையிலையை பயன்படுத்தி மயங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இந்த புகையிலை வாய் நாற்றத்தைப் போக்கும் வாசனைப் பொருள் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதால், இதற்கு மாணவர்கள் மிகவும் எளிதாக அடிமையாகின்றனர். இது மிக மிக ஆபத்தான போக்கு ஆகும்.


 

புகைக்கும் புகையிலை, மெல்லும் புகையிலை ஆகியவற்றை விட கூல் லிப் புகையிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 50&க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். வழக்கமான புகையிலைப் பொருட்கள் இளைஞர்களை குறி வைக்கும் நிலையில், கூல் லிப் மாணவர்களை குறி வைப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று  விதிகள்  உள்ள நிலையில், கூல் லிப் போதைப் புகையிலை வகுப்பறை வரை வந்து பரபரப்பாக விற்பனையாகிறது.
 

மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பதின் வயது பழக்க வழக்கங்களை பொறுத்தே அமையும்.  சரியாக பதின் வயது தொடங்கும் பருவத்தில் மாணவர்கள் கூல் லிப் புகையிலைக்கு அடிமையானால் அடுத்தடுத்தக் கட்டங்களில் இன்னும் மோசமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை இழந்து விடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.