Skip to main content

“இளம் தளிர்கள் வளரும்போதே களைகளாக மாறுவது வேதனையளிக்கிறது..” பாமக நிறுவனர் ராமதாஸ் 

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

PMK Ramadoss statement about National Criminal Archives report

 

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறார்கள் ஆண்டுக்காண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில்  சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.

 

தமிழ்நாட்டில் சிறுவர்கள் ஈடுபட்ட கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் இரு மடங்குக்கும் கூடுதலாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1,603 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 48 கொலைகளில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக் கூறி கைது செய்யப்பட்டனர். அடுத்த 4 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால், சிறுவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன. 2020ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.61% மட்டுமே அதிகரித்து 1,661 ஆகியுள்ள நிலையில், சிறுவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் 116.66% அதிகரித்து 104 ஆக உயர்ந்துள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்தான் கொலைக்குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை மிகவும் கவலையளிக்கக்கூடியவை ஆகும்.

 

கொலைக்குற்றங்கள் மட்டுமின்றி பிற குற்றங்களிலும் சிறுவர்கள் ஈடுபடுவது பெருகிவருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2020ஆம் ஆண்டில் தேசிய அளவில் சிறுவர்கள் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாக குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம்; அவர்களைத்தான் இந்தியாவை வல்லரசாக்கக் கூடியவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். அனைத்திலும் சிறந்தவர்களாக வளர வேண்டிய அவர்கள், கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிக்கி சீரழிவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதே நமது முதன்மைக் கடமையாகும்.

 

எந்தக் குழந்தையும் பிறக்கும்போது தீயவர்களாகவோ, குற்றச் செயல்களை செய்பவர்களாகவோ பிறப்பதில்லை. வான்மழை எவ்வளவு தூய்மையானதோ, அதே அளவுக்கு குழந்தைகளும் தூய்மையானவர்கள். ஆனால், ‘நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு’ என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க குழந்தைகளும், சிறுவர்களும் எந்த சூழலில் வாழ்கிறார்களோ, அந்த சூழலில் ஆதிக்கம் செலுத்துபவர்களைப் போலவே மாறிவிடுகின்றனர். குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் சிறுவர்களை மூளைச்சலவை செய்து திருட்டு முதல் கொலை, கொள்ளை வரை அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். தொடக்கத்தில் குற்றங்களை செய்கிறோம் என்பது தெரியாமல் செய்யும் பல சிறுவர்கள், பின்னர் தொழில்முறை குற்றவாளிகளாக மாறி விடுகின்றனர்.

 

பதின்வயதில் குற்றங்களைக் குற்றம் என்று அறியாமலேயே அவற்றை செய்வது சாகசம் என்று நினைக்கும் சிறுவர்களின் மனநிலையை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது,  18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனை குறைவு என்பதால், சமூகவிரோதிகள் சிறுவர்களைப் பயன்படுத்திக்கொள்வது, ஏழைச் சிறுவர்கள் செல்பேசி உள்ளிட்ட தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும்போது, அவற்றை வாங்கித் தருவதாக ஆசை காட்டி சிறுவர்களை குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுத்துவது, மது, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தடையின்றி கிடைப்பது போன்றவைதான் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு மிக முக்கியக் காரணமாகும். இந்த தீய வாய்ப்புகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

 

இளம் தளிர்கள் வளரும்போதே களைகளாக மாறுவது வேதனையளிக்கும் விஷயமாகும். இதற்கான காரணங்கள் என்னென்னவென்று கண்டுபிடித்து அவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை தரமான, சுகமான, சுமையற்ற, ஒழுக்க நெறிகள் மற்றும் விளையாட்டுடன் கூடிய கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் அன்பு காட்டி அரவணைப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், சட்டம், காவல்துறை, சீர்திருத்தப் பள்ளிகள் உள்ளிட்டவற்றைவிட குழந்தைகள் தவறான வழியில் திசைமாறிச் செல்லாமல் தடுப்பது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும்.

 

சென்னையில் காவல்துறையினரால் நடத்தப்படும் காவல் சிறார் மன்றங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்துவருகிறது. இத்தகைய பள்ளிகள் அதிகரிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் அவர்களுக்கு இயல்பாக உள்ள கல்வி மற்றும் கலை சார்ந்த திறமைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.