/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramadass-art_1.jpg)
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் போது, வங்கக் கடலில் வீசப்பட்ட ரூ.10.10 கோடி மதிப்புள்ள 17.74 கிலோ எடையுள்ள தங்கத்தை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் மீட்டுள்ளனர். தங்கக் கடத்தல் நடப்பாண்டில் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க மக்களுக்கு ஆதரவான வழிமுறைகள் உள்ள நிலையில், அவற்றை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது. இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு மீன்பிடி படகுகள் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நடுக்கடலில் சோதனையிட்டனர். அதையறிந்த கடத்தல்காரர்கள் 17.74 கிலோ தங்கத்தை கடலில் வீசி விட்டனர். கடலோரக் காவல்படைஉதவியுடன் கடலில் வீசப்பட்ட தங்கத்தை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் மீட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு அதிக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 2022&23 ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 209 கிலோ கடத்தல் தங்கமும், தேசிய அளவில் 950 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பிடிபட்ட தங்கம் 209 கிலோ என்றால், பிடிபடாமல் கடத்திச் செல்லப்பட்ட தங்கத்தின் அளவு இன்னும் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடப்பாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 706 டன் ஆகும். இதில் பாதிக்கும் கூடுதலாக 400 டன் அளவுக்கு இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டிற்கு தான் அதிக தங்கம் கடத்தி வரப்படுவதாகத்தெரிகிறது. தங்கக் கடத்தல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதற்கு காரணம் இந்திய அரசின் வரிக் கொள்கை தான். பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தங்கத்தின் விலை ஒரே அளவில் இருந்ததால் தங்கக் கடத்தல் குறிப்பிடும்படியாக இல்லை. 2012-13-ஆம் ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருந்த போது, தங்க இறக்குமதியை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2 விழுக்காடு என்ற அளவில் அறிமுகப்படுத்தி, படிப்படியாக 10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தினார். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்தவுடன் இறக்குமதி வரி நீக்கப்படும் என்று சிதம்பரம் அளித்த வாக்குறுதி காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தங்கம் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.50 விழுக்காடாக உயர்த்திய பா.ஜ.க. அரசு, அதன் மீது வேளாண் மற்றும் கட்டமைப்பு வரி என்ற பெயரில் 2.5% கூடுதல் வரி விதித்தது.இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது மொத்தம் 15% வரி விதிக்கப்படுகிறது. 10 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கு ரூ.1.50 கோடி வரி செலுத்த வேண்டும் என்பதால் தங்கக் கடத்தல் கவர்ச்சிகரமான தொழிலாக மாறிவிட்டது. இதனால் ஒருபுறம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, இன்னொருபுறம் சட்டவிரோத கருப்பு பொருளாதாரம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இது நல்லதல்ல.
மற்றொருபுறம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ஏழை மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கத்தின் மீது ஒரு விழுக்காடு விற்பனை வரி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இறக்குமதி வரி, வேளாண்மை மற்றும் கட்டமைப்பு வரி, ஜி.எஸ்.டி வரி என 18% வரி வசூலிக்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் மீதான இந்த வரிகளின் மதிப்பு மட்டும் ரூ.7,750 ஆகும். கிட்டத்தட்ட இதே அளவுக்கு சேதாரம் வசூலிக்கப்படுகிறது என்பதால் ஒரு சவரன் மதிப்பில் தங்க நகை எடுக்கும் பொதுமக்கள் 15,500 ரூபாயை வரியாகவும், சேதாரமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். பத்தாண்டுகளுக்கு முன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி வருவாய்க்காக விதிக்கப்படவில்லை. மாறாக நடப்புக் கணக்குபற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டது. இப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துவிட்ட நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது வெகுவாகக் குறைக்க வேண்டும். இதன் மூலம் தங்கக் கடத்தலை தடுப்பதுடன், நாட்டில் தங்கத்தின் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)