பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்து வருகிறார். 

அதே சமயம் ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் எம்எல்ஏ அருள் சேலத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் புறக்கணிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாமகவின் மாவட்ட பொறுப்பில் இருந்து அருளை அன்புமணி நீக்கி உத்தரவிட்டிருந்தார். அந்த நேரத்தில் பாமக எல்.எல்.ஏக்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனையடுத்து அருளைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ராமதாஸ் அறிவித்திருந்தார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார். 

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளை நீக்குவதாக நேற்று (02.07.2025) அன்புமணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம்  மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் இன்று (03.07.20250 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளைக் கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராமதாஸ், “அருள் சட்டமன்ற உறுப்பினர். அவரை நீக்கும் அதிகாரம் அவரிடம் (அன்புமணி)  இல்லை. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னால் நிறுவனர் தலைவரான என்னால் தான் செய்ய முடியும். சட்டமன்றத்தில் 5 பேருக்கு அருள் கொறடா. இந்த 5 பேருக்கும் தலைவரான சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி இந்த 5  சட்டமன்ற உறுப்பினருடைய தலைவர்.

இவர் கொறடாவை நீக்குகின்ற அதிகாரம் அவர் மூலமாகச் சபாநாயகருக்கு அறிவித்து அதன் பிறகு தான் நீக்கலாம். முதலில் நான் அனுமதி கொடுக்க வேண்டும். மேலும் அவருக்கு இணை பொதுச் செயலாளராகவும், நிர்வாக குழு உறுப்பினராகவும் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறேன். அன்புமணியால் தனக்கு வேதனையாக உள்ளது. மனசு வேதனைப்படுகின்ற அளவு சில செய்திகள், சில செயல்கள் அழுத்தம் செய்கின்றன. ஆனாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தொடர்ந்து பா.ம..க.வை வழி நடத்துகிறேன். திமுகவோடு பேசிருக்காங்க. அதிமுகவோடு பேசிட்டு இருக்கிறார்கள், அவங்களோட பேசிட்டு இருக்காங்கல்லாம் வெறும் வதந்திகள் தான். நான் சொன்னபடி  நிர்வாக குழு, மாநில செயற்குழு கடைசியில் பொதுக்குழு என இந்த 3 குழுவும் தான் முடிவு செய்யும். இந்த ஆண்டிலேயே பாமக பொதுக்குழுவைக் கூட்டுவேன். எனவே புதிய நிர்வாகிகள் திறம்படக் கட்சி பணியாற்ற அறிவுறுத்துகிறேன்” எனப் பேசினார்.