Skip to main content

“போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த ஓட்டுநர்கள் கூடாது” - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

pmk ramadoss said Transport corporation should not have contract drivers

 

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்  கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்ககூடாது என்றும், அது போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமையாக மாற்றும் நடைமுறையின் முதல் படி என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுனர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக பறிக்கும் இந்த முறை கண்டிக்கத்தக்கது.


அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பில்,‘‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுனர்களை பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 13ஆம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இது போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமையாக மாற்றும் நடைமுறையின் முதல் படியாகும். இதை அனுமதிக்க முடியாது.

 

இந்த புதிய நடைமுறையின்படி ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம், விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 400 ஓட்டுனர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும். நிரந்தர ஓட்டுனர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதை விட குறைவான ஊதியத்தை 400 பேருக்கும் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வழங்கும். அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு வழங்கும். இது தொடக்க நிலை நிரந்தர ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்  பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது. சுருக்கமாக கூற வேண்டுமானால், இப்போது அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் இனி அமைப்பு சாராத தினக்கூலி தொழிலாளர்களாக மாற்றப் படுவார்கள். இது போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் செயல் ஆகும்.

 

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத் துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த முறை திணிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை பணியாளர்களின் உரிமையாளராக அரசு தான் இருக்க வேண்டும். மாறாக, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கக் கூடாது. தொழிலாளர்களை காக்க வேண்டிய அரசு அவர்களை கைவிடக்கூடாது.

 

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அதன் நிர்வாகமே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரந்தர ஓட்டுனர்களை நியமித்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஓட்டுனர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதை தவிர்க்கவே இத்தகைய குறுக்குவழியை விரைவுப் போக்குவரத்துக் கழகம் கையாள்கிறது. இதை போக்குவரத்துத்துறை கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதன் அதிகாரிகள் இதை கண்டும் காணாமலும் இருப்பது, உழைப்புச்சுரண்டலுக்கு துணை போவதாகவே பொருள்.

 

முந்தைய அதிமுக ஆட்சியிலேயே இந்த அவுட்சோர்சிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே  அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7 அல்லது 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கிவிடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் தாண்டவமாடுகிறது’’ என்று விமர்சித்திருந்தார். முதலமைச்சரால் விமர்சிக்கப்பட்ட நடைமுறையையே அவரது ஆட்சியில் திணிக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் முயல்வது எந்த வகையில் நியாயம்?

 

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக மாறி, ஒரு காலத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மட்டும் தான் அனைத்துத் துறைகளிலும் பணியில் இருப்பார்கள். அத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு  அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்; அதற்கு பதிலாக அனைத்து உரிமைகளுடன் கூடிய நிரந்தர ஓட்டுனர்களை அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.