ADVERTISEMENT

 மக்கள்நலப் பணிகள் முடக்கம்: தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்! ராமதாஸ்

11:56 AM Apr 21, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23-ஆம் தேதி தான் நடைபெறவிருக்கிறது என்பதால் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாளான மே மாதம் 27-ஆம் தேதி வரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் அடிப்படை நோக்கமே அரசின் செயல்பாடுகள் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான். நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலைப் பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதில் தவறில்லை. ஒருவகையில் பார்த்தால் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமானவையும் கூட. ஆனால், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமா? என்பது தான் இப்போதைய வினாவாகும். மக்களவைத் தேர்தல் அட்டவணை மார்ச் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த 43 நாட்களாக நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நலப்பணிகள் எதையும் மேற்கொள்ள முடியவில்லை. அதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு தேர்தல் நடத்தை விதிகள் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலாகக் கூடும்.

தமிழ்நாட்டில் வறட்சி, கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகளாலும், வறுமையாலும் வாடும் மக்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட போதிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் புகார் மனு அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் துயரத்தை சரியான நேரத்தில் துடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டமே உருவாக்கப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு சென்றடையும் முன்பாகவே, தமிழக அரசின் ரூ.2000 நிதி வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதேபோல், உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வழங்கும் மத்திய அரசின் திட்டமும் முடக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி தமிழக விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் இரு தவணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இன்னும் ஒரு தவணை கூட வழங்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் காரணம் தேர்தல் நடத்தை விதிகள் தான். தேர்தல் நடைமுறை நிறைவடைய இன்னும் 37 நாட்கள் உள்ளன. அதுவரை ஏழை, எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகளை நிறுத்தி வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

அரசின் உதவிகள் காலத்தினால் செய்யப்படுபவையாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதி உதவித் திட்டங்களை இன்னும் 37 நாட்கள் கழித்து வழங்குவது பயனளிக்காது. எனவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடத்தை விதிகளை தளர்த்தி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவித் திட்டங்களையும், மக்களுக்குத் தேவையான மற்ற நலத்திட்டப் பணிகளையும் செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டும்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT