"இதனால்தான் குறைவான தொகுதிகளைப் பெற்றுள்ளோம்" - அன்புமணி ராமதாஸ் பேட்டி!

pmk party leader anbumani ramadoss pressmeet at chennai

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க.- பா.ம.க. இடையேயான தொகுதிப் பங்கீடு, சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் இறுதிசெய்யப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும்" என்றார்.

pmk party leader anbumani ramadoss pressmeet at chennai

பா.ம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

pmk party leader anbumani ramadoss pressmeet at chennai

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், "2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்.தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துப் பெற்றிருக்கிறோம். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் தொகுதி எண்ணிக்கையைக் குறைத்துப் பெற்றிருக்கிறோம். வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. 40 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு முடிவு வந்துள்ளதால் தொகுதி எண்ணிக்கையைக் குறைத்துப் பெற்றுள்ளோம்" என்றார்.

2001- ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து பா.ம.க. போட்டியிடுகிறது. 2006 மற்றும் 2011- ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. 2016- ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதுகுறிப்பிடத்தக்கது.

anbumani ramadoss Chennai pmk pressmeet tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe