Skip to main content

“25வது உயிர்ப்பலி: ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன?” - அன்புமணி கேள்வி

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

PMK Leader Anbumani question about  online game Prohibition Ordinance

 

“ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தின் இன்றைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தமிழக முதலமைச்சர்  உறுதியளித்தவாறு ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

 

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த சாய்நகரைச் சேர்ந்த நரசிம்மராஜ் என்ற 32 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல லட்சம் ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கடன் சுமை அதிகரித்துவிட்ட நிலையில், அவரது வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். அதன் பிறகும் ஆன்லைன் சூதாட்ட போதையிலிருந்து நரசிம்மராஜ் மீண்டு வராத நிலையில், அவரை மனைவி கண்டித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், அவரது மனைவி சிவரஞ்சனியை கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்து உடலை வீட்டில் பதுக்கி விட்டு தப்பிச் சென்று விட்டார். சிவரஞ்சனியின் கொலை காவல்துறை மூலம் நேற்று தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.


ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் மட்டுமே நிகழ்ந்து வந்த நிலையில், இப்போது கொலைகளும்  அதிகரித்து விட்டன. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழும் 25-ஆவது உயிர்ப்பலி சிவரஞ்சனியின் மறைவு ஆகும். இவர்களில் சிவரஞ்சனியையும் சேர்த்து மொத்தம் 5 பேர் எந்த பாவமும் செய்யாமல், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். ஆன்லைன் சூதாட்டம் தற்கொலைகளை மட்டுமின்றி கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களையும், சமூக சீரழிவுகளையும் ஏற்படுத்துவதற்கு இதுவே உதாரணமாகும்.


ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை நன்கு உணர்ந்ததால் தான் அதை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஜூன் 10ஆம் தேதி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; அது குறித்து அரசுக்கு இரு வாரங்களில் பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, இரு வாரக் கெடுவைக் கடந்து கடந்த 27-ஆம் தேதி அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது அன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன்படி அமைச்சரவைக் கூட்டத்தில் வல்லுனர் குழுவின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் ஜூன் 28-ஆம் தேதி நாளிதழ்களிலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாயின.


ஆனால், அதன்பின்னர் 12 நாட்களாகிவிட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் குறித்து இப்போது வரை எந்தத் தகவலும் இல்லை. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதா? அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அச்சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதா? ஒருவேளை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைதியை கடைபிடித்து வருகிறது.


ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு ஆகும். உடனடியாக அந்தக் கேடு தடை செய்யப்படவில்லை என்றால் தமிழ்நாடு சமூக ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்தும் மிக மோசமான சீரழிவுகளை சந்திக்கும். அதற்கு தமிழக அரசு இடம் கொடுத்து விடக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தின் அனைத்து தீமைகளையும் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில்  இரண்டாவது சிந்தனைக்கோ, தயக்கத்திற்கோ எவ்வகையிலும் இடம் தரக் கூடாது.


ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தின் இன்றைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். அதன்பின்னர் அதை ஆளுனருக்கு அனுப்பி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.