
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, 2015- ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு மனுவில், அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னிர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநராக இருந்த ரோசையாவிடம் ஊழல் புகார் அளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரில் 2011- ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது முதலே அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், முதல்வர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் என பாகுபாடு இல்லாமல் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதல், ஆற்று மணல் அள்ளுவது, பாலில் கலப்படம், முட்டை கொள்முதல், கட்டிட கட்டுமான அனுமதி, பருப்பு கொள்முதல் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரிடம் 2013 மற்றும் 2015- ஆம் ஆண்டுகளில் 200 பக்கங்களைக் கொண்டப் பட்டியலை பா.ம.க. வழங்கிய நிலையில், தொடர் நினைவூட்டல்கள் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரிடம் கொடுத்தப் புகாரை 2015- ஆம் ஆண்டே தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று (23/07/2021) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணராஜா ஆகியோர் ஆஜராகினர். அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அளித்த விளக்கத்தில், பா.ம.க. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டத் துறைகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவை வந்தவுடன், சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பா.ம.க. தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தார்.