“ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார்?” - பா.ம.க. சார்பில் போலீசில் புகார்!

ramadoss-mic

பா.ம.க.வில் அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் ராமதாஸ் தலைமையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 11ஆம் தேதி (11.07.2025) கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்குப் பிறகு ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த துப்பறியும் குழுவினர் 5 பேர் ராமதாஸ் வீட்டில் முழுமையாகச் சோதனை செய்தனர். 

அப்போது வீட்டில் வேறு ஏதேனும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்ற கோணத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒட்டுக் கேட்பு கருவியை ஆய்வு செய்து துப்பறியும் குழுவினர் அதன் அறிக்கையை ராமதாஸிடம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் பா.ம.க.வின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், “ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார்?. எதற்காக இந்த ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்தார்கள்?. இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?. என்பதைக் கண்டறிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

anbumani ramadoss CYBER CRIME POLICE pmk police Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe