ADVERTISEMENT

இன்ஸ்பெக்டரின் அடாவடித்தனம்... பதைபதைக்கும் வீடியோ காட்சி... நடவடிக்கை எடுக்க பாமக வலியுறுத்தல்

04:19 PM Apr 12, 2020 | rajavel

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாமக ஒன்றியச் செயலாளர் சக்திவேல். இவர் கடந்த 10ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, இரவு 12 மணியளவில் சின்னசேலம் மற்றும் கீழ்குப்பம் காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுதாகர், சக்திவேல் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த சக்திவேலை சட்டையை பிடித்து வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கும் நாலரை நிமிட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

ADVERTISEMENT


இன்ஸ்பெக்டர் சுதாகருடன் இரண்டு காவலர்கள் அந்த கிராமத்திற்கு சென்றதாகவும், அவர்கள் அந்த கிராமத்திற்குள் நுழையும்போதே மின்சாரத்தை துண்டிவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கின்றனர் இந்த சம்பவத்தை அறிந்தவர்கள். மேலும், எதிர்பாராத திடீர் தாக்குதலை கண்டு சக்திவேல் கதறி அழுததோடு தன்னை ஏன் அடிக்கிறீர்கள்? என்று கேட்டபோது சுதாகர் எந்த பதிலும் பேசாமல் சட்டையை கொத்தாக பிடித்து கடுமையாக தாக்கிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்துள்ளார்.

ADVERTISEMENT


அப்போது சக்திவேல் போட்ட சத்தத்தால் அவரது பெற்றோர்கள் எழுந்து ஓடிவந்து. இன்ஸ்பெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர். என் மகனை ஏன் அடித்து இழுத்துச் செல்கிறீர்கள்? அவன் என்ன தவறு செய்தான்? என கெஞ்சி இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறிய போதும் அவர்களை எல்லாம் நெட்டித் தள்ளிவிட்டு சக்திவேலை சக போலீசார் உதவியுடன் தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்றுள்ளார். இன்ஸ்பெக்டர் சுதாகர், சக்திவேலை காவல் நிலையத்தில் வைத்து தான் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று ஒரு வழக்கு பதிவு செய்துகொண்டு அவரை அனுப்பி விட்டார் என கூறுகின்றனர்.

இது சம்பந்தமாக நாம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டோம். சில தினங்களுக்கு முன்பு பாமகவினர் மீது சுதாகர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான பிரச்சனையில் இதுபோன்று பொய் வழக்கு பதிவு செய்தால் பாமக தீவிர போராட்டம் நடத்தும் என்று சக்திவேல் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் சுதாகர், சக்திவேல் மீது கடும் கோபம் கொண்டுள்ளார். இந்தக் கோபத்தின் உச்சமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் இருக்கும்போது தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடியிருந்த நிலையில் இரவு 12 மணிக்கு மது போதையில் இன்ஸ்பெக்டர் சுதாகர், சக்திவேலின் ஊரான மூங்கில் பாடிக்கு சென்று அவரை தாக்கயுள்ளார் என்கிறார்கள் மூங்கில்பாடி கிராம மக்கள்.

அதன்பிறகு ஊர் மக்கள் சத்தம் கேட்டு எழுந்து ஓடி வருவதற்குள் சுதாகரின் கார் சக்திவேலை ஏற்றிக் கொண்டு சின்னசேலம் காவல்நிலையம் நோக்கி பறந்து சென்றுவிட்டது. ஊருக்கு மின்சாரம் கொடுக்கும் டிரான்ஸ்பார்மை இரவு நேரத்தில் போலீசார் நிறுத்தி வைத்திருந்ததை அவ்வூர் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். மிக மோசமான செயலில் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஈடுபட்டுள்ளது கண்டு ஊர் மக்கள் எல்லோரும் கோபமும் வேதனையும் அடைந்துள்ளனர்.




இந்த செய்தி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரை சென்றுள்ளது. இதுதொடர்பாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ''சின்ன சேலம் மூங்கில்பாடியில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சக்திவேலை குடிபோதையில் தாக்கிய காவல்துறை ஆய்வாளர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது மட்டும் போதாது. வழக்குப்பதிந்து கைது செய்து, பணியிடை நீக்கம் செய்யும் அளவுக்கு அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன.

காவல் ஆய்வாளர் சுதாகர் திண்டிவனத்தில் பணியாற்றிய போது, பா.ம.க.வினர் இருவரைத் தாக்கியது தொடர்பாக, நீதிமன்றத்தின் மூலம் அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்டவர்கள் காவல் பணியில் நீடிக்கக்கூடாது!

காவல் ஆய்வாளர் சுதாகருக்கு கல்வராயன்மலை பகுதியில் மது ஒழிப்பு பணி வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவர் குடிபோதையில் மூங்கில்பாடி வந்து, மின்சாரத்தை துண்டித்துவிட்டு பா.ம.க. நிர்வாகியை தாக்கியிருப்பது காவல்துறையின் புனிதத்தைக் கெடுக்கும் செயல்!

காவல்துறையின் நோக்கங்களுக்கு மாறாக, மனித உரிமைகளை மீறுவதையும், அப்பாவிகளை தாக்குவதையும் மட்டுமே பிழைப்பாக கொண்ட சுதாகர் போன்றவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக வழக்கறிஞர்கள் பிரிவு முன்னெடுக்கும்! இவ்வாறு கூறியுள்ளார்.

உடனே அவர் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சக்திவேலுக்கு செல்போன் மூலம் ஆறுதல் கூறியதோடு, அவரை மருத்துவமனையில் சேர்க்கவும் ஏற்பாடு செய்துள்ளார். அதோடு பாமக வழக்கறிஞர்கள் மூலமாக இன்ஸ்பெக்டர் சுதாகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்க் கொள்ளுமாறு கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் சுதாகர் ஏற்கனவே கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றியபோது மணல் கொள்ளை அமோகமாக நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்ல புகார் சம்பந்தமான விசாரணையின்போது அத்துமீறி நடப்பது அவருக்கு சர்வசாதாரணமான செயல் என்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக திட்டக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் மீது வழக்கு சம்பந்தமான விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார் இன்ஸ்பெக்டர் சுதாகர். இதனால் தன் மகன் மீது கொடூர தாக்குதல் நடத்திய இன்ஸ்பெக்டர் சுதாகர் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து மாநில மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் சுதாகர் 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டதோடு அவர் மீது காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமநத்தம் காவல் நிலையத்தில் இவர் பணியில் இருந்தபோது ஒரு சலூன் கடைக்கு முடி வெட்டுவதற்கு சென்றுள்ளார் சுதாகர். அந்த சலூன் கடையில் ஏற்கனவே ஒருவருக்கு சலூன் கடைக்காரர் முடி வெட்டிக் கொண்டிருந்துள்ளார். இன்ஸ்பெக்டரை சற்றுநேரம் பொறுத்து இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் சலூன் கடைக்காரர். ஆனால் இன்ஸ்பெக்டர் சுதாகர் கோபமாக காவல்நிலையம் சென்று விட்டார். மாலை அந்த சலூன் கடைக்காரரை சக காவலர்களை விட்டு அழைத்து வரச் செய்து காவல் நிலையத்தில் வைத்து அவரை அடித்துஉதைத்து துன்புறுத்தி உள்ளனர். அந்த சலூன் கடைக்காரர் காவல்துறையினர் மீது உள்ள பயத்தினால் அதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். சுதாகர் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்த பிறகு கடந்த ஒரு ஆண்டாக கட்டப் பஞ்சாயத்துகள்தான் அங்கு கொடிகட்டிப் பறந்துள்ளது என்கிறார்கள் சின்னசேலம் பகுதிமக்கள்.

ஒன்றிய செயலாளர் சக்திவேல் தாக்கப்பட்ட சம்பவத்தில் அடிப்படையில் காவல் துறை உயரதிகாரிகள் இன்ஸ்பெக்டர் சுதாகரை சின்னசேலம் காவல் நிலையத்திலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளனர். அவருக்கு இது சரியான தண்டனை அல்ல. அவரை உடனடியாக கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் சுதாகரை தொடர்பு கொண்டோம். அவர் செல்போன், தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என்றே பதில் வந்தது. இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் சுதாகர் கருத்து தெரிவித்தாலும் வெளியிட தயாராக உள்ளோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT