Skip to main content

பாமக தலைவர் ஆனார் அன்புமணி ராமதாஸ்!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

PMK. Anbumani Ramadas MP will be the chairman. Choose!

 

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (28/05/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

இக்கூட்டத்தில், பா.ம.க.வின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை, ஜி.கே.மணி முன்மொழிய, பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கட்சியின் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 

இது தொடர்பாக, பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது மருத்துவர் ராமதாஸ் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும்  பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.

 

தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01/01/1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்  என்ற விருப்பத்தை ஜி.கே. மணி  கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

 

இந்திய வரலாற்றில் இளம் வயதில் மத்திய கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றவர். உலகத்தின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தியவர். உயிர் காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்தவர். புகையிலை ஒழிப்பு மற்றும் போலியோ நோய் ஒழிப்புக்காக 4 சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றவர். மிகவும் இளைய வயதில் உலக சுகாதார அவையை தலைமையேற்று நடத்தியவர். 50 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஐந்தாண்டுகளில் செய்தவர் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்காலும், மருத்துவத் துறையின் நடமாடும் என்சைக்ளோபீடியா என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியாலும் பாராட்டப்பட்டவர்.

 

ஐ.நா. தலைமை செயலாளராக இருந்த பான்-கி-மூன் அவர்களே மரபுவரிசையை (Protocol) மீறி, அலுவலகத்திற்கு தேடி வந்து பாராட்டிய பெருமைக்குரியவர். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதி காத்தவர் என ஏராளமான பெருமைகளுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவர் கட்சியை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார் என்று இந்தப் பொதுக்குழு நம்புகிறது.

 

தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.

 

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸை ஒருமனதாக தேர்வு செய்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.